Welcome to
MALAYSIA NAALVAR MANDRAM
aboutus
போற்றுதலுக்கும் பாராட்டிற்கும் உரிய மெய்யன்பர்கள் அனைவரையும் இந்த இணையத்தளத்தின் வழி சந்திப்பதில் பேருவகை அடைகின்றோம்.
மலேசியத் தமிழர்கள், சைவத்தின் மேன்மையினையும் திருமுறைகளின் மாண்பினையும் உய்த்துணர்ந்து நெறிமிக்க வாழ்க்கை வாழவேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் மலேசிய நால்வர் மன்றம் 2013 –ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாகத் தோற்றுவிக்கப்பட்டது. மேலும், வீட்டுக்கொரு சமய ஆசிரியரை உருவாக்கும் வண்ணம், தோற்றுவிக்கப்பட்ட நாள் முதல் மலேசிய நால்வர் மன்றம் தடம் மாறாமல் கொண்ட குறிக்கோளை மீறாமல் செயல்பட்டு வருகிறது. நாடறிந்த சமய நல்லாசான் திரு. பாலகிருஷ்ணன் கந்தசாமி அவர்கள் மலேசிய நால்வர் மன்றத்தின் தலைவராக மிகச்சிறந்த முறையில் பணியாற்றி வருகிறார்.
சமய ஆசிரியருக்கான ஐந்து படிநிலை பயிற்சிகள், திருமுறைப் பயிற்சியும் பயிலரங்க இளையோருக்கான வாழ்வியல் திறன் முகாமும் பயிலரங்குகளும், இளையோர் எழுச்சி முகாம், ஆறுபத்து மூன்று நாயன்மார்களின் குருபூசைகள், இல்ல வழிபாடுகள், தமிழ் மறையாம் திருமுறை மாநாடு, ஆன்மிகச் சொற்பொழிவுகள், மகளிர்க்கான வாழ்வியல் பட்டறைகள், சைவ சமய வகுப்புகள் போன்ற நிகழ்ச்சிகளை மலேசிய நால்வர் மன்றம் நாடளவில் நடத்தி வருகின்றது. வாழ்தலே வழிபாடு என்ற உயரிய சிந்தனையை அடிப்படையாகக் கொண்டு மேற்கண்ட நிகழ்ச்சிகள் யாவும் செவ்வனே நடைபெற்று வருகின்றன.
சைவமும் தமிழும் நமதிரு விழிகள் என்பதை மலேசியத் தமிழர்கள் மறந்துவிடக்கூடாது என்பதற்காக அனைத்து நிகழ்ச்சிகளும் அன்னைத் தமிழிலேயே நடைபெறுகின்றன. சைவ சமயத்தின் கருவூலமாகிய சைவ சித்தாந்தம், திருமுறைகளின் இறைக் கொள்கையும் சமுதாயச் சிந்தனையும் தமிழர்களைச் சென்றடைய வேண்டும் எனும் வேட்கையில் மலேசிய நால்வர் மன்றம் பல நூல்களையும் இதுவரை வெளியிட்டுள்ளது. மலேசியத் தமிழர்களுக்குப் பயன்மிக்க சமய செய்திகளைக் கொண்டு செல்வதே மலேசிய நால்வர் மன்றம் அறிமுகம் செய்துள்ள இந்த இணையத்தளத்தின் உயரிய நோக்கமாகும். எனவே, சைவ மெய்யன்பர்கள் யாவரும் இத்தளத்தின் வழி சமயத் தகவல் பெற்று இறைமையை உணர்ந்து ஆன்மிகப் பயணத்தைத் தொடங்க வாரீர்!!!