கோயிலுக்குச் சென்று கடவுளை வணங்கவில்லை எனறால் பாவிகளாக ஆகிவிடுவோமா?

பதில்:

 

இந்து சமயத்தில் 'பாவிகள்' என்று எவரும் கிடையாது. இந்துவாக பிறந்த ஒவ்வொருவரும் புண்ணிய ஆத்மாவாகவே கருதப்படுகிறார்கள். வினைக்கேற்ப அப்புண்ணிய ஆத்மா இன்ப துன்பங்களை அனுபவிக்கின்றது. அவ்வாறு இன்பத்தை அனுபவிக்கும் ஆத்மா மேலும் பேறின்பத்தைப் பெறவும், துன்பத்தை அனுபவிக்கவும் ஆத்மா அவ்வினையிலிருந்து மீளவும், இந்து சமயம் 'இந்துவுக்குச் சில கடமைகளாக' கூறுகின்றது.

அதில் ஒன்றுதான் ஆலய வழிபாடு. ஆத்மா உய்வுபெற ஆலய வழிபாடு சிறந்ததெனக் கூறப்படுகின்றது. இதில் வற்புறுத்தல் கிடையாது. ஆலய வழிபாடு உங்கள் வினைகளை வேரோடு அறுக்கின்றது. இல்ல வழிபாடு தேவை. ஆனால் வினைகள் இருந்துக்கொண்டே இருக்கும். உங்களுக்கு இரண்டு மாம்பழங்கள் கொடுக்கப்படுகின்றன. ஒன்று பழுத்தப்பழம், இன்னொன்று காயாகும். எதைச் சாப்பிடுவது, எதைச் சாப்பிடாமல் இருப்பது என்பது உங்களைப் பொருந்தது. அதேபோல் ஆலய வழிபாடு எனும் ஞானப்பழம் உங்கள் முன் உள்ளது. அதைப் பயன்படுத்திக் கொள்வதும் கொள்ளாததும் உங்களைப் பொருந்தது. திருமூலர் எனும் பெருஞ்சித்தர் தனது திருமந்திரத்தில் 'ஆலயந்தோறும் சென்று வழிபடுவோர் உள்ளத்தை ஆண்டவன் தனக்கு ஆலயமாகக் கொண்டு எழுந்தருள்கிறான்' என்கிறார். மனிதனைப் புனிதனாகச் செய்வது ஆலயம்.